UP Election Results 2022 : 5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் எந்த ஒரு கட்சியும் 2-வது முறையாக ஆட்சி அமைத்ததாக கடந்த 37 ஆண்டுகளில் வரலாறு இல்லை.
2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224, பகுஜன் சமாஜ் கட்சி 80, பா.ஜ.க. 47, காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 312, சமாஜ்வாடி 47, பகுஜன் சமாஜ் 19, காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

பாரதிய ஜனதா கட்சி இந்த மாநிலத்தில் தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பது கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுமார் 40 சதவீத வாக்குகளை பா.ஜ.க. பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக உயர்ந்தது.
இந்துத்துவா கொள்கைகளை முன்நிறுத்துவதால் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய ஹாத்ராஸ் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய ஹாத்ராஸ் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 236 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உ.பி.யில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 1985-ம் ஆண்டுக்குப் பின் உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருப்பது இதுவே முதல் முறை. சமாஜ்வாதி கட்சி 87 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 6 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
