கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 3700க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளீக்கப்பட்டுவருகிறது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கஷ்டப்படுகின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு கட்டாயம் என்பதால் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால்தான் தெரியும். ஆனால் இதற்கிடையே, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதி ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு ஊரடங்கு குறித்த அப்டேட்டை செய்யும் முன்பே ஊரடங்கு 15ம் தேதி முடிவுக்கு வரும் என்று ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

உத்தர பிரதேச எம்பிக்களுடன் ஆலோசித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏப்ரல் 15ம் தேதி ஊரடங்கு உத்தரவு அகற்றப்படும். எனவே அதன்பின்னர் மக்கள் கூட்டம் கூடாமல் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக உங்களது(எம்பிக்கள்) ஆலோசனைகளை கேட்பதற்காகத்தான் இந்த கூட்டம். ஊரடங்கு முடிவு வாபஸ் பெறப்பட்ட பின்னர், மக்கள் கூடினால் இதுவரை பட்ட கஷ்டம் வீணாகிவிடும். எனவே இயல்பு நிலை திரும்பும்போது மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார்.

ஊரடங்கு குறித்த அப்டேட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வராத நிலையில், ஊரடங்கு ஏப்ரல் 15ம் தேதி வாபஸ் பெறப்படும் என்று யோகி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய இணையமைச்சர் மஹேந்திர நாத் பாண்டே, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, உத்தர பிரதேச அரசு ஊரடங்கை செயல்படுத்திய விதம் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசியதாக தெரிவித்திருக்கிறார்.