‘பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லை’ என்று பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமெண்ட் அடித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரியங்காவை கட்சியின் பொதுச் செயலாளராக அறிவித்து களமிறக்கி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதோடு, உ.பி. கிழக்கு பகுதிக்கு பொறுப்பாளராகவும் பிரியங்காவை நியமித்திருக்கிறார். இந்த பகுதியில்தான் மோடியின் வாரணாசி தொகுதி, உ.பி. முதல்வர் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற கோரக்பூர் ஆகிய தொகுதிகள் வருகின்றன. பாஜகவையும், கூட்டணியில் சேர்க்க மறுத்த பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சமாளிக்கவும் பிரியங்கா துருப்புச் சீட்டாகப் பயன்படுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள்.

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறது. பிரதமர் மோடி தொடங்கி மாநில முதல்வர்கள் வரை பலரும் பலவகையிலான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் உ.பி. முதல்வர் யோகியும் சேர்ந்திருக்கிறார். பிரியங்கா அரசியல் பிரவேசம் பற்றி பேசிய அவர், “பிரியங்காவின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சியை எங்கும் கொண்டு போகாது. பிரியங்கா ஒரு பூஜ்ஜியம். ஒரு பூஜ்ஜியத்துடன் (ராகுல்) பூஜ்ஜியத்தைச் (பிரியங்கா) சேர்த்தால் பூஜ்ஜியம்தானே வரும். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பூஜ்ஜியம். அதில் யார் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அதிலிருந்து ஒன்றும் வராது” என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் கிண்டலாக கமெண்ட் அடித்துள்ள நிலையில், உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றிருக்கிறார். “அரசியலுக்கு இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். அந்த வகையில் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பாராட்டத்தக்கது. இந்த விஷயத்தில் ராகுல் செய்தது சரிதான். பிரியங்காவின் வருகை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியைப் பாதிக்காது. பாஜகவைத்தான் பாதிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.