அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இன்று முதல் ஏப்ரல் 24 வரை இந்தியாவில் தங்குகிறார். இருநாட்டு வர்த்தக உறவுகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவார்.
US vice president JD Vance Usha chilukuri visiting India: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று இந்தியா வந்தடைந்தார். துணை அதிபராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இந்தியா வந்திருக்கும் ஜேடி வான்ஸ் இன்று முதல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை இந்தியாவில் தங்குகிறார்.
இந்தியா மீது அமெரிக்கா வரி:
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் டொனால்ட் டிரம்பின் நீண்ட கால உறவை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மீது அமெரிக்கா 26% வரி விதித்து இருக்கும் நிலையில், வான்ஸ் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் முதன் முறை அமெரிக்க அதிபராக இருந்தபோது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு நீடித்து வந்தது. 'ஹவுடி மோடி' மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' போன்ற நிகழ்வுகள் இருநாடுகளிலும் நடத்தப்பட்டது.
இந்தியாவின் ராஜதந்திரமும் MIGA, MAGA திட்டங்களும்:
அமெரிக்காவை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அதாவது, குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் இந்தியா நல்ல உறவை பேணி பாதுகாத்து வருகிறது. மோடி, டிரம்ப் இருவரும் தங்களது நாடுகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்று வந்தார். இதன் தொடர்ச்ச்சியாக இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்று இருந்தபோது MIGA, MAGA திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதாவது ''Make India Great Again'', ''Make America Great Again'' என்பதாகும்.
இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:
தற்போது, இந்தியா-அமெரிக்க உறவுகளில் துணை அதிபர் வான்ஸ் ஒரு முக்கிய நபராக உருவெடுத்துள்ளார். இவரது மனைவி உஷா இந்திய வம்சாவளி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் மோடி அமெரிக்கா சென்று இருந்தபோது மோடியும், டிரம்பும் கூட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தனர். பாதுகாப்பு தொழில்நுட்பம், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, முக்கியமான கனிமங்கள், குறைக்கடத்திகள், விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம் ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் நீட்சியாக இன்று வான்ஸ் இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் ஜே.டி. வான்ஸ் பயண திட்டம்:
வான்ஸ் தனது மனைவியும் இந்திய வம்சாவளியுமான உஷாவுடன் இன்று இந்தியா வந்துள்ளார். இவர்கள் இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
* இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் இருக்கும் பாலம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
* இவர்களுக்கு காலை 10 மணிக்கு அரசு மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது லோக் கல்யான் மார்க் இல்லத்தில் சந்திக்கிறார் வான்ஸ். வான்ஸ், உஷா தம்பதிகளுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.
* இவர்களது சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து பேசப்படும்
* பிரதமர் மோடி 22-23 ஆகிய தேதிகளில் முந்தைய நிகழ்வின்படி சவுதி அரேபியா புறப்பட்டுச் செல்கிறார். மோடியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் செல்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.
* வான்ஸ் குடும்பத்தினர் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்ல உள்ளனர்.
*திங்கள் கிழமை இரவே வான்ஸ் குடும்பத்தினர் ஜெய்ப்பூர் செல்ல உள்ளனர். அங்கு அவர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா வரவேற்கிறார். வரலாற்று சிறப்புமிக்க ராம்பாக் மாளிகையில் தங்குகின்றனர்.
இரண்டாம் நாள்:
யுனெஸ்கோவில் இடம் பெற்று இருக்கும் அமர் கோட்டைக்கு வான்ஸ் குடும்பத்தினர் செல்கின்றனர்.
மூன்றாம் நாள்:
ஏப்ரல் 23ஆம் தேதி ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹாலை பார்வையிடுகின்றனர். அன்று மாலையே ஜெய்ப்பூர் திரும்புகின்றனர்.
நான்காம் நாள்:
ஜெய்ப்பூரில் இருந்து ஏப்ரல் 24ஆம் தேதி வான்ஸ் குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
