ராமர் கோயில் திறப்பு விழாவை ஒரு வார காலம் கொண்டாடும் அமெரிக்க கோயில்கள்!
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒரு வார காலம் கொண்டாட அமெரிக்க கோயில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.
ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக தினத்தன்று, அந்தந்த கிராமங்கள், உள்ளாட்சிகள், கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம பக்தர்களைக் கூட்டி பஜனை கீர்த்தனை செய்யுங்கள். கும்பாபிஷேக விழாவை டிவி அல்லது எல்இடி மூலம் மக்களுக்குக் காட்டுங்கள். உங்கள் வீட்டில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பஜனை-கீர்த்தனை-வழிபாடு செய்யுங்கள். வீட்டின் முன் விளக்குகள் ஏற்றுங்கள். 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புனிதமான தருணம் வந்துள்ளது.” என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஒரு வார காலம் கொண்டாட அமெரிக்க கோயில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, வட அமெரிக்காவில் உள்ள கோயில்கள் ஒரு வார விழா கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருவதாக இந்த கோயில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம் மற்றும் ஆசீர்வாதமாகும். பல நூற்றாண்டுகள் காத்திருப்பு மற்றும் போராட்டத்திற்குப் பிறகு எங்களது கனவவு நிறைவேறவுள்ளது. அமெரிக்காவிலும் கனடாவிலும் அனைவரும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர். பகவான் ஸ்ரீ ராமரை அவரது கோயிலில் வரவேற்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.” என்று இந்து கோயில்களுக்கு அதிகாரமளிக்கும் கவுன்சில் (HMEC) தலைவர் தேஜல் ஷா கூறியுள்ளார்.
இந்து கோயில்களுக்கு அதிகாரமளிக்கும் கவுன்சில் என்பது அமெரிக்காவில் உள்ள 1,100 க்கும் மேற்பட்ட இந்து கோயில்களின் உச்ச அமைப்பாகும். ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, வட அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களில் ஒரு வார கால கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த கொண்டாட்டம் திறப்பு விழா நாளில் முடிவடையும் எனவும் தேஜல் ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும், இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, ஆயிரக்கணக்கான இந்துக்கள் கும்பாபிஷேக திறப்பு விழாவை பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்ரீ ராம் ஜனம் பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் 'பிரசாதம்' வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவில் ஜனவரி 21ஆம் தேதி இரவு 11 மணி. எனவே, காணொலி மூலம் அனைவரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.