இன்றுவரை, இந்தியா மீது அமெரிக்க பதில் வரி விதிக்கவில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா 'தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க' ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க உறுதியளிக்கவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இன்றுவரை அமெரிக்காவால் இந்தியா மீது பதில் வரிகள் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.

"இரு நாடுகளும் பரஸ்பரம் நன்மை பயக்கும், பல துறைகளைக் கொண்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. சந்தை அணுகலை அதிகரிப்பது, வரி மற்றும் பிற தடைகளைக் குறைப்பது மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தும்," என்று அவர் கூறினார்.

நாற்காலியுடன் வெளியேறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! வைரலாகும் பிரியாவிடை காட்சி!

பிப்ரவரி 13 அன்று அமெரிக்கா பதில் வரி விதிப்பு குறித்த குறிப்பாணையை வெளியிட்டது. அதில் வர்த்தக செயலாளரும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியும் வர்த்தக கூட்டாளிகளால் அமெரிக்காவிற்கு ஏற்படும் தீங்குகளை விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஒவ்வொரு வர்த்தக கூட்டாளிக்கும் விரிவான முன்மொழியப்பட்ட தீர்வுகளுடன் ஒரு அறிக்கையை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனுக்குச் சென்றபோது, ​​இந்தியாவும் அமெரிக்காவும் இருவழி வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்குவதற்கும், 2025 இல் பரஸ்பர நன்மை பயக்கும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டது. 

2023ஆம் ஆண்டில், பொருட்கள் மற்றும் சேவைகளில் அமெரிக்கா-இந்தியா இருதரப்பு வர்த்தகம் 190.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது (பொருட்களில் 123.89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் சேவை வர்த்தகத்தில் 66.19 பில்லியன் அமெரிக்க டாலர்கள்).

அந்த ஆண்டில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 83.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதி 40.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இதனால் இந்தியாவுக்கு 43.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தக இடைவெளி ஏற்பட்டது. 2021-24 ஆம் ஆண்டில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது.

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு உரிமம் ரத்து! சென்னை மாநகராட்சி அதிரடி!