அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் வருகைக்கான பூர்வாங்க பணிகளை மத்திய அரசு தீவிரவமா மேற்கொண்டு வருகிறது.

இந்த வார இறுதியில் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குழு மற்றும் பொருட்கள், வாகனங்களைக் கொண்டுவரும் குழு இந்தியா வந்து பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.அதிபர் ட்ரம்ப்பை ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவர் அந்த அழைப்பை மறுத்துவிட்டார். இந்த சூழலில் அமெரிக்க செனட் சபையில் விரைவில் அதிபர் ட்ரம்ப் மீது குற்றவிசாரணை நடைபெற உள்ளது. 

அதற்கு முன்பாக இந்தியா வருவதற்கு அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். கடந்த 7-ம் தேதி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது இந்தியா வருமாறு பிரதமர்மோடி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை அதிபர் ட்ரம்ப் ஏற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது, அதற்கு முன்பாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ஹர்ஷ் ஸ்ரிங்களா இந்தியாவுக்கு வரும் முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தி்த்துப் பேசியுள்ளார். அதன்பின்புதான இந்தியாவில் டிரம்ப் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையொப்பம் ஆகாமல் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர்மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது. மேலும், கடந்த ஜூலைன் மாதம் இந்தியாவுக்கு வழங்கியி இருந்த ஏற்றுமத சலுகைகள் அனைத்தையும், ஜிஎஸ்பி அந்தஸ்தையும் அமெரிக்கா ரத்து செய்தது. 

அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகையின் போது, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசும் போது, இந்த சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்புகின்றன. ேமலும், அமெரிக்காவில் முதலீடு செய்வது குறித்தும், அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்தும் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிடலாம்.அதுமட்டுமல்லாமல் விமானப் போக்குவரத்து, மின்னணு வர்த்தகத்தில் விதிமுறைகளை தளர்த்துவது ஆகியவை குறித்து இரு தலைவர்கள் சந்திப்பின்போது பேசப்படும் எனத் தெரிகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் துணைஅமைச்சர் ஆலிஸ் வெல்ஸ், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மாத்யூ பாட்டிங்கர் ஆகியோர் டெல்லி வர உள்ளனர். அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் வருகை குறி்த்து பேசுவார்கள்.