சந்திரயான் போல நிலவுக்கு அப்பால் செல்லும் அமெரிக்க இந்திய உறவு: ஜெய்சங்கர்!
சந்திரயான் போன்று நிலவுக்கும் அதற்கு அப்பாலும் அமெரிக்க இந்திய உறவு செல்லும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இந்தியா-அமெரிக்க உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது, மோடி அரசு அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லப் போகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். சந்திரயான் போல, இருதரப்பு உறவுகளும் சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செல்லும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த 'நட்பின் வண்ணங்களைக் கொண்டாடும்' நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியா ஹவுஸில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு உச்சத்தில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அவர்கள் சொல்வது போல், நீங்கள் இன்னும் எதையும் பார்க்கவில்லை. எனவே, இந்த உறவை வேறு நிலைக்கு கொண்டு செல்லப் போகிறோம்.” என்றார்.
ஜி20யின் வெற்றி அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது என ஜெய்சங்கர் தெரிவித்தார். “தலைவர் என்ற முறைஇல் சில விஷயங்கள் நன்றாக நடக்கும் போது, அவர் எப்போதும் நன்மதிப்பைப் பெறுகிறார். அது நியாயமானது. ஆனால், ஜி20 இன் அனைத்து உறுப்பினர்களும் அதன் வெற்றிக்காக உழைக்கவில்லை என்றால், ஜி20 ஒன்றிணைந்திருக்க முடியாது.” என்றார்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் மகாத்மா காந்தியின் படம் உள்ளது?
“நான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் இன்று இந்த நாட்டில் இருக்கிறேன், வெற்றிகரமான ஜி20-யை நடத்த அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பங்களிப்பு, ஆதரவை பொதுவெளியில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்.” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இது உண்மையில் எங்கள் வெற்றியாக இருக்கலாம். ஆனால் இது ஜி20 நாடுகளின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வெற்றியாகும். இந்த கூட்டாண்மைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் என்று ஜெய்சங்கர் கூறினார். அமெரிக்க - இந்திய உறவு சந்திரயானைப் போலவே, சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செல்லும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மனித நேயம் இருதரப்பு உறவை தனித்துவமாக்குகிறது என்று கூறிய ஜெய்சங்கர், இருதரப்பு உறவை கட்டியெழுப்புவதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அற்புதமான ஒன்று என்றும் கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சி, சந்திரயா3, ஜி20 வெற்றி ஆகியவற்றை குறிப்பிட்டு, இன்றைய இந்தியா முன்பு இருந்ததை விட வித்தியாசமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.