பீகாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. என்றாலும், தாய்ப்பாலின் நன்மைகள் அதிகம் என்பதால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (Uranium - U238) கலந்திருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தத் தேவையில்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

தாய்ப்பாலில் யுரேனியம்

பீகாரின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. அதிர்ச்சியளிக்கும் விதமாக, சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ககாரியா (Khagaria) மாவட்டத்தில் சராசரி அளவு அதிகமாகவும், கத்ஹார் (Katihar) மாவட்டத்தில் தனிநபர் ஒருவரின் மாதிரியில் அதிகபட்ச அளவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், சுமார் 70 சதவீதம் பேருக்கு யுரேனியம் மூலம் உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் (Risk) உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளுக்கு யுரேனியம் செல்வதால், நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரக வளர்ச்சி பாதிப்பு, நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சனைகள், அறிவுத்திறன் குறைவு (Low IQ) மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படலாம்.

"தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்"

இந்த ஆய்வு முடிவுகள் குறித்துப் பேசிய எய்ம்ஸ் மருத்துவர் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியர் அசோக் சர்மா முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டாலும், அதன் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. தாயின் உடலில் சேரும் யுரேனியம் பெரும்பாலும் சிறுநீர் வழியாகவே வெளியேறிவிடும்; தாய்ப்பாலில் செறிவது குறைவுதான். எனவே, இதனால் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் ஆபத்து ஏற்படாது.

மருத்துவர்கள் பிரத்யேகமாகக் கூறினாலொழிய, தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்குத் தாய்ப்பாலே மிகச் சிறந்தது," என்று வலியுறுத்தியுள்ளார்.

காரணம் என்ன?

இயற்கையாகவே கிரானைட் மற்றும் பாறைகளில் யுரேனியம் காணப்படுகிறது. சுரங்கப் பணிகள், நிலக்கரி எரிப்பு, அணுசக்தி கழிவுகள் மற்றும் பாஸ்பேட் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றால் நிலத்தடி நீரில் யுரேனியம் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் தாய்மார்களின் உடலில் இது சேர்கிறது. இந்தியாவில் 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்தக்கட்டமாக, மற்ற மாநிலங்களிலும் தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் கனரக உலோகங்கள் கலந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.