அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பில் ஆள் சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 21லிருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பில் ஆள் சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 21லிருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு துறையில் ஆண்டுக்கு 45 ஆயிரம் வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க டூர் ஆஃப் டியூட்டி என்ற புதிய வேலைவாய்ப்பு முறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு அக்னி பாத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில் சேர்க்கப்படுபவர்கள் அக்னி வீர் என்றழைக்கப்படுவர். இவர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். பணி காலத்தில் 45 லட்சம் ரூபாய் அளவில் இன்சூரன்ஸும், வீரர்கள் வீரமரணமடைய நேரிட்டால் 44 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளில் தகுதி அடிப்படையில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 15 ஆண்டுகள் என்ற நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள 75% பேர் பென்சன் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மாறாக அவர்களுக்கு வரிப்பிடித்தமின்றி 11.4 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பணப்பலன் வழங்கப்படும். இந்த பணப்பலனும் அரசால் முழுமையாக வழங்கப்படாது. வீரர்களின் மாத ஊதியத்தில் சேவா நிதி என மாதம் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து அதே அளவு தொகையை அரசும் செலுத்தி அதற்கான வட்டியுடன் சேர்த்து 4 ஆண்டுகள் முடிவில் 12 லட்சம் ரூபாய் வரை வீரர்களுக்கு வழங்கப்படும். ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் பாதுகாப்பு துறைக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான 5.25 லட்சம் கோடியில் ஓய்வூதியத்திற்கு மட்டும் 1.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்தால் குறையும் பெருமளவு செலவை தளவாடங்கள் வாங்க பயன்படுத்துவதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தில் ஆள் சேர்ப்புக்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வரை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகபட்சி வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பில் ஆள் சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 21லிருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து, தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான உத்தேச ஆட்சேர்ப்பு சுழற்சிக்கு ஒரு முறை விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 21லிருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
