UP school tells students to get Yogi haircut adithiyanath

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று மாணவர்கள் முடிவெட்டி வர வேண்டும், முஸ்லிம் மாணவர்கள் தாடி வைக்க கூடாது என்று மீரட் நகரில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி சர்ச்சைக்குரிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீரட் நகரில் ஜெயின் சமூகத்தினருக்கு சொந்தமான ரிஸ்பா அகாதெமி சி.பி.எஸ்.சி. உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவிகளும், மாணவர்களும் 2,800 பேர் படிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் அனைவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று முடி வெட்டி வர வேண்டும், முஸ்லிம் மாணவர்கள் தாடி வைக்க கூடாது எனத் தெரிவித்தது.

இந்த உத்தரவை பின்பற்றாத மாணவர்களை நேற்று முன் தினம் பள்ளிக்குள் அனுமதிக்காமல் நிர்வாகம் வௌியே அனுப்பியது. அப்போதுதான் இந்த விசயம் வௌியே கசிந்தது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பள்ளியின் நிர்வாக மேலாண்மைக் குழுச் செயலாளர் ரஞ்சித் ஜெயின் கூறுகையில், “ முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று முடி வெட்டி வாருங்கள் என்று மாணவர்களிடம் கூறினேன். நான் என்ன கூறினேன் என்பதை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், இந்த பள்ளி ஒன்றும் மதரசா கிடையாது, ஆதலால், மாணவர்கள் யாரும் தாடி வைக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன். ஜெயின் சமூகத்தினரால் இந்த பள்ளி நடத்தப்படுவதால், இங்கு மாணவர்கள் மதிய உணவாக முட்டை சாப்பிடக்கூட அனுமதியில்லை. அடிக்கடி மாணவர்கள் சாப்பிடும் போதும் ஆய்வும் செய்வோம்’’ எனத் தெரிவித்தார்.

ஒரு மாணவரின் தந்தை முகம்மது ஷரீக் கூறுகையில், “ இந்த பள்ளியின் நிர்வாகம், மதவேற்றுமையுடன் பள்ளியை நடத்த முயற்சிக்கிறது. இது மதராசா கிடையாது என்று முஸ்லிம் மாணவர்கள் தாடி வைக்கவும், அசைவசம் உண்ணவும் தடை விதித்துள்ளனர்’’ என்றார்.

மேலும், முறையாக முடிவெட்டாமல் வரும் மாணவர்களை கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர்கள் அடிக்கிறார்கள் என்றும் மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி வகுப்புகளை ஒதுக்கி பாடம் நடத்த பள்ளி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதாகக் கூறப்படுகிறது.