குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு உணவு, தண்ணீரின்றி 5 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக ஆதித்யநாத் இருந்து வருகிறார். இவரின் அமைச்சரவையில் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின்  அமைச்சராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.

இவர் நேற்று முன்தினம் பாலியா நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியதுதான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் பேசியதாவது-

என் விருப்பப்படி சட்டத்தை நான் அமல்படுத்த போகிறேன். ஏழை மக்களின் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாவிட்டால், அவர்களின்  பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்தில் 5 நாட்கள் அமரவைக்கப்படுவார்கள். அவர்களுக்கு உணவும், குடிக்க தண்ணீரும் கொடுக்கப்பாடாது.  நீங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துகிறீர்களா என தொடர்ந்து 6 மாதங்களுக்கு கவனிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அமைச்சர் ஓம்பிரகாஷிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “ நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாத பெற்றோர்களை சிறைக்கு அனுப்புவேன் என மிரட்டியதால் என்ன தவறு இருக்கிறது. குழந்தைகள் கல்வி கற்க அரசு அனைத்து வசதிகளையும் செய்யும் போது, ஏன் குழந்தைகள் அனுப்ப மறுக்கிறார்கள்’’ என்றார்.