லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவாஸ்தவா, நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக ரஷ்ய அரசு பதிலளித்துள்ளது.

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் தனது மகனைச் சேர்த்துக்கொள்ளுமாறு லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவாஸ்தவா கோரிக்கை விடுத்துள்ளார். அவரது உருக்கமான கடிதத்தை பரிசீலிப்பதாக ரஷ்ய அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

ரஷ்யாவின் கேன்சர் தடுப்பூசி இந்தியாவில் உள்ள அந்த 21 வயது இளைஞரின் குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

தந்தையின் வேண்டுகோள்

லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவாஸ்தவாவின் 21 வயது மகன் அன்ஷ் ஸ்ரீவாஸ்தவா புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வழங்கப்படும் சிகிச்சையின் நிச்சயமற்ற தன்மையால் கவலை அடைந்த மனு, ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள புற்றுநோய் தடுப்பூசி தனது மகனைக் குணப்படுத்த உதவும் என நம்புகிறார்.

இதையடுத்து, அவர் இந்திய அரசுக்கும், ரஷ்ய அரசுக்கும் கடிதங்கள் மூலம் தனது மகன் அன்ஷை ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் சேர்க்குமாறு கோரினார். பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த அக்டோபர் 27 அன்று ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான கடிதம் வந்துள்ளதாக மனு ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கேன்சர் தடுப்பூசி

இந்திய அரசு அளித்த பதிலில், தற்போது ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் இந்தத் தடுப்பூசி, அந்நாட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், சோதனை நடத்துபவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதால், வேறு எந்த நாட்டிற்கும், சோதனை நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் ஏஜென்சியின் (FMBA) தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்ஸோவா செப்டம்பர் 7 அன்று தெரிவித்தபடி, ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி முன் மருத்துவப் பரிசோதனைகளை (Preclinical Trials) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது பாதுகாப்பானது மற்றும் அதிக செயல்திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது.

இந்தத் தடுப்பூசி, புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, கட்டிகளின் அளவைக் குறைப்பதிலும், அதன் வளர்ச்சியைக் குறைப்பதிலும் 60% முதல் 80% வரை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தத் தடுப்பூசியால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.