OBC சமூகத்திற்கான உ.பி. அரசின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் OBC சமூகத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் OBC சமூகத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார். அப்போது அரசு திட்டங்களின் பலன்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் எடுத்துச் சென்று அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் யோகி கூறியதாவது:
"கடந்த ஏழரை ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, ஓபிசி சமூகம் மைய நீரோட்டத்திற்கு வந்திருக்கிறது. ODOP மற்றும் விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் போன்ற திட்டங்கள் OBC சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் பயனுள்ள திட்டங்களானாலும் சரி, இட ஒதுக்கீடு போன்ற அரசியலமைப்பு உரிமைகளின் பலன்களாயினும் சரி, தற்போதைய அரசில் ஓபிசி சமூகம் முழு பலன்களைப் பெற்று வருகிறது.
இந்த ஆணையத்தின் அதிகாரிகள் ஓபிசி சமூகத்தினரைச் சந்தித்து அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். சில காரணங்களால் யாரேனும் அரசுத் திட்டத்தின் பலனைப் பெற இயலவில்லை என்றால், அவர்களுக்காக ஆணையம் பரிந்துரையும் செய்யலாம். முந்தைய அரசுகளை ஒப்பிடும்போது, தற்போதைய ஆட்சிக் காலத்தில், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அரசுப் பணிகளுக்கான தேர்வில் அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஆணையத்தின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். OBC சமூகத்தை நாட்டின் மைய நீரோட்டத்துடன் இணைத்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆணையம் பங்களிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் திறமையும், புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த திசையில் சிறந்த செயல் திட்டத்துடன் ஆணையம் முன்னேற வேண்டும்."
இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும், OBC ஆணையத்தின் அலுவலகத்தில் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் போதிய அறைகள் அமைத்துத் தருமாறும், ஆணையம் சுமுகமாகச் செயல்படத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறும் துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.