உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தேசிய கீதத்தின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அதனை சிறப்பிக்க நாடு முழுவதும் ஓராண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்
இந்த கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், கோரக்பூரில் நடந்த 'ஏக்த யாத்திரை' மற்றும் வந்தே மாதரம் கூட்டு பாடல் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், '' உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரத மாதா மற்றும் தாய்நாட்டின் மீது மரியாதை உணர்வு ஏற்படும் வகையில், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 'வந்தே மாதரம்' பாடுவதை கட்டாயமாக்குவோம்'' என்று கூறினார்.
தேசிய ஒற்றுமை வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், ''தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்தப் பாடல் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் பொதுவெளியில் பாடப்பட வேண்டும். இது அனைவருக்கும் அவசியம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காரணிகளை நாம் கண்டறிய வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் எந்த ஜின்னாக்களும் உருவாகாதபடி நாம் அவர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.
தேசிய கீதத்துக்கு எதிராக நிற்கும் சமாஜ்வாதி
ஒரு சமாஜ்வாதி கட்சி எம்.பி மீண்டும் தேசிய கீதத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பிய சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளைத் தவிர்த்துவிட்டு, ஜின்னாவைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளில் வெட்கமின்றி கலந்துகொள்ளும் நபர்கள் தான் இவர்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடக்கூடியவர்களை எதிர்கொள்ள, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காரணிகளை அடையாளம் காண்பது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.
