ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்ய இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. மொபைல் செயலி மூலம் டிக்கெட்டைப் பதிவு செய்து விட்டு நேரடியாகவே பயணம் செய்யும் முறையை ரயில்வே நிர்வாகம் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

பஸ் கட்டண உயர்வு, கூடுதல் நேரம் போன்றவற்றைத் தவிர்க்க பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். தற்போது வட மாநிலங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பெரும்பாலான பயணிகள் ரயிலில் தான் தங்களது பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் ரயில் பயணம் செய்வோர் அதிகரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அவசரமாக ரயிலில் செல்பவர்கள் கடைசி நேரத்தில் வியர்க்க..விறுவிறுக்க நீண்ட க்யூவில் நின்று காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் வாங்கவேண்டிய நிலை தற்போது உள்ளது. இந்த கடைசி நேர பரபரப்பைக் குறைக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை ரயில்வே துறை அறிமுகப்படுத்துகிறது.

இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு பிரிண்ட்அவுட் எதுவும் தேவையில்லை. அடுத்த வாரம் முதல் இந்த செயலி  அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகிறது.