கொரோனா பொதுமுடக்கம் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டது. நேற்றுடன் நான்கு கட்ட பொதுமுடக்கமும் முடிவடைந்த நிலையில், அன்லாக் 1.0 என்ற பெயரில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 

அதன்படி, இன்று முதல் நாடு முழுவதும் பேருந்துகள் இயங்க தொடங்கிவிட்டன. சமூக, பொருளாதார செயல்பாடுகள் பெரும்பாலும் தொடங்கப்பட்டுவிட்டன. 

ஊரடங்கால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில், பொருளாதார மீட்பிற்காக மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கி, அனைத்து தரப்பும் பயன்பெறும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டது. 

விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளுக்காகவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,  இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. 

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கான திட்டங்கள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்கரி மற்றும் நரேந்திர தோமர் ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 14 விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை 50 முதல் 83% சதவிகிதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்தார். 

அதன்படி, பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.260 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,515 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசிக்கு குவிண்டாலுக்கு ரூ.53 உயர்த்தி, ஒரு குவிண்டாலின் விலை ரூ.1,868ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,620ஆகவும் திணை குவிண்டாலின் விலை ரூ.2150ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கேழ்வரகு, சோயாபீன், அவரை, நிலக்கடலை ஆகியவற்றின் கொள்முதல் விலை 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. அதனால் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.