Asianet News TamilAsianet News Tamil

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

Union Minister Nitin Gadkari visits Uttarakhand Tunnel Collapse Site smp
Author
First Published Nov 19, 2023, 2:51 PM IST | Last Updated Nov 19, 2023, 2:51 PM IST

சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதற்கிடையே, சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவர்களுடன் உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்துவும் உடனிருந்தார்.

பாரம்பரிய மருத்துவம்: உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்!

தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கிடைக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைத்து வகையான நிபுணர் குழுக்களும் இங்கு பணிபுரிகின்றனர் என்றார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே எங்களின் முதல் முன்னுரிமை. இதற்காக அனைத்து ஏஜென்சிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் அவர்கள் விரைவில் மீட்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

முன்னதாக, பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் மங்கேஷ் கில்டியால் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகரும் சுரங்கப்பாதையில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல், கிறிஸ் கூப்பர் என்ற நுண் சுரங்கப்பாதை நிபுணர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியைக் கண்காணித்து மேற்பார்வை செய்தார்.

சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நவீன இயந்திரங்கள் கொண்டும், குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios