ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் மூவர் கைது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டது குறுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரஜையான அவரது கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டு தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கும் இந்திய அரசுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று குறித்து விசாரித்து வருவதாகவும் கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 4 நாட்கள் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு; கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்றார். “கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். அவர்கள் ஒருவித கும்பல் பின்னணியைக் கொண்ட இந்தியர்கள் என்று தெரிகிறது. அவர்களை பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.” என்றார்.
“இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை செய்ய கனடாவில் இருந்து செயல்பட அனுமதித்துள்ளனர். இது நமது கவலைகளில் ஒன்று.” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல், கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் குறித்து கனடா அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை பெறுவோம் என நம்புகிறோம் என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.