உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேக்க நிலை நிலவுவதாக கூறியுள்ளதுடன், ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் தனியார் துறையின் தயக்கங்களைக் களைய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தமாக பொருளாதார நிலைமையும் மாறிவிட்டதாகவும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்து வருகிறார். அதில், உலகளவில் பொருளாதாரம் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற வளர்ந்த நாடுகளிலும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. 

உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து குறைக்கப்படலாம். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எல்லா துறைகளிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.