இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். கடந்த மாதம் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் பள்ள கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது ஆன்லைன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட தொடங்குமா? என்கிற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறும்போது இந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மத்திய அரசுக்கு மிக மிக முக்கியம் என்றும் 14ம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதா அல்லது தொடர்ந்து மூடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 14ம் தேதிக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவதாக இருந்தால் மாணவர்களின் கல்வி ஆண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.