கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதலே முக்கியமான ஒன்று. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் மும்பையில் ஒரு முதியவரும் பீஹாரில் 38 வயது இளைஞரும் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வந்தாலும், இந்தியாவில் இன்னும் பொதுச்சமூகத்தில் கொரோனா பரவவில்லை. எனவே பொதுச்சமூகத்தில் பரவுவதற்கு முன்பாக, அதை கட்டுப்படுத்தி, தடுத்து விரட்டுவது முக்கியம்.

கொரோனா பாதிப்பு பொதுச்சமூகத்திற்கு பரவுவதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதற்கு மேல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. அந்தவகையில், இன்று ஒருநாள், இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் இன்று ஊரடங்கை பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70ஐ கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இதுவரை வெறும் 7 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெவ்வேறு இடங்களில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா பரவுகிறது என்பதால், பயணப்பட்ட அனைவருமே பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை மாநிலங்களுக்குள் அனுமதிப்பதில்லை. 

அதேபோல ரயில் சேவை வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்களில் பயணிப்பவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கூட, அவர் வந்த பெட்டியில் அவருடன் கூட வந்தவர்கள் உட்பட அனைவரையும் பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அந்த ரிஸ்க்குகளை தடுப்பதற்காக, பயணிகள் ரயில் சேவை வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொரோனா அடுத்தகட்டத்திற்கு பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இத்தாலியில் இரண்டாம் கட்டத்தை தாண்டியதால் தான் அந்நாடு பேரழிவை சந்தித்துவருகிறது. எனவே இரண்டாவது கட்டத்தை தாண்டி பொதுச்சமூகத்தில் பரவவிடக்கூடாது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும் கூட, இன்னும் பொதுச்சமூகத்தில் பரவவில்லை. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. பொதுச்சமூகத்தில் பரவ தொடங்கினால், அதிவேகமாக ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடும்.

அதனால் தான் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. நேற்றிரவு 290ஐ கடந்திருந்த நிலையில், இன்று 370ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் பொதுச்சமூகத்திற்கு இன்னும் கொரோனா பரவவில்லை என்பதை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். நாடு முழுதும் 1000 மருத்துவமனைகளுக்கு கொரோனாவின் தீவிரத்தன்மையை எதிர்கொண்டு சிகிச்சையளிக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.