உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், இவற்றின் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கெனவே சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 லிருந்து ரூ.300ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார். இதன் மூலம், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவாக கிடைக்கும்.

Scroll to load tweet…

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, கடைசியாக கடந்த ஜூலை மாதம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்த்தின. முன்னதாக, கடந்த மே மாதத்தில் இரண்டு முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு: இதுதான் சரியான சான்ஸ்!

அதன் தொடர்ச்சியாக, அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று மத்திய அரசு ரூ.200 குறைத்தது. ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு ரூ.200 மானியம் அளிக்கப்பட்டுள்ளதால், அந்த பொது அறிவிப்போடு சேர்த்து அப்போது அவர்களுக்கான சிலிண்டர் விலை ரூ.400 குறைக்கப்பட்டது. தற்போது, உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு மேலும் ரூ.100 மானியம் அளிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான சிலிண்டர் விலையில் ரூ.100 குறைய உள்ளது.

முன்னதாக, 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலையை அக்டோபர் 1ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.203 உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.