பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் நோக்கில், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள், சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 3 ஆண்டுகால கடும் முயற்சிக்கு பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம், இந்த வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.

சிகரெட் உற்பத்தி, விற்பனை, விளம்பரப்படுத்துதால் ஆகியவற்றில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அதன்படி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விற்கலாம் என்று இதுவரை சட்டம் இருந்த நிலையில், அது 21 வயதாக உயர்த்தப்படவுள்ளது. எனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்கக்கூடாது. அதை மீறி குறைந்த வயதுடையவர்களுக்கு சிகரெட் விற்பவர்களுக்கு சிறை தண்டனை, 2 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல சிகரெட் பாக்கெட்டாக இல்லாமல் தனியாக சில்லறைக்கு விற்பனை செய்யப்படுவது தடை செய்யும் அம்சமும் அதில் இடம்பெற்றுள்ளது. சிகரெட்டின் சில்லறை விற்பனை, மாணவர்கள் அவற்றை காசு கொடுத்து வாங்க வழி செய்கிறது. எனவே அதை தடுக்கும் வகையிலும், சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறும் எச்சரிக்கையை புகைபிடிப்பவர்கள் பார்க்க வைப்பதற்காகவும், சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொது இடங்களில் புகை பிடிப்பதை முற்றிலும் ஒழிக்கும் வகையில், விமான நிலையங்கள், விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு என்று தனியாக பிரத்தியேக அறைகள் இருப்பதை நீக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீறி, பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம், ரூ.200லிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படவுள்ளது.

இதுமாதிரியான கடும் சட்டங்களால் சிகரெட் விற்பனை கடும் சரிவை சந்திக்கும். சிகரெட் விற்பனைக்கான வயது வரம்பு அதிகரிப்பு, சில்லறை விற்பனைக்கு தடை ஆகிய அம்சங்கள் ஐடிசி நிறுவனத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகரெட்டை உற்பத்தி செய்யும் ஐடிசி நிறுவனத்தைவிட, சிகரெட் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய பெட்டி கடைகளுக்குத்தான் கடும் பாதிப்பு.

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம் தான். ஆனால் அதேவேளையில், சிகரெட் சில்லறை வியாபாரத்தையே பெரிதும் நம்பி பெட்டி கடைகளை நடத்தி வருபவர்களுக்கு இது பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். சாதாரண பெட்டி கடைகளிலோ, டீக்கடைகளிலோ பெரும்பாலும் யாரும் சிகரெட் பாக்கெட்டை வாங்கமாட்டார்கள். ஒன்றிரண்டு சிகரெட்டுகளை மட்டுமே வாங்குவார்கள். அப்படியிருக்கையில், சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிப்பது, சுமார் 2.5 லட்சம் பெட்டி கடைகளின் நிலையை கேள்விக்குறியாக்கிவிடும்? சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி அரசின் கடமையோ, அதேபோல இதுமாதிரியான பெட்டிக்கடைகளின் வருவாய் இழப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் கடமை தான்.