சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. எனவே நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தனிமைப்படுதலின் அவசியத்தை உணர்த்தி மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அதேவேளையில், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், பால் ஆகியவை கிடைப்பதில் சிக்கலில்லை. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பத்தில் சிக்கல் இருக்காது என்று அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் சேவையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

அந்த கடிதத்தில், 21 நாட்கள் ஊரடங்கின்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் தனிமைப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த 21 நாட்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் சேவைகளும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி, மக்களுக்கு உதவி எண்களை அறிவிக்க வேண்டும். மக்களின் குறைகளையும் அத்திவாசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான சிக்கள்கள் இருந்தால் அதை தீர்த்துவைக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் கண்காணிக்க தனியாக அதிகாரியை நியமித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநில நிர்வாகத்துக்கு இடையே பாலமாக இருக்கச்செய்ய வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இலவச உதவி எண்களை வழங்க வேண்டும். புதிதாக கட்டுப்பாட்டு அறை மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு அதிகாரியையும் நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.