நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு சில முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கும் மேல் பரவி கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம்  பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நம்மையும், நம் குடும்பத்தையும், நம் குழந்தைகளையும், நண்பர்களையும் பாதுகாக்க இதைவிட்டால் வேறு  வழியில்லை. இந்த முடிவால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். ‘உங்கள் வீட்டை சுற்றி லட்சுமண கோடு போடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அதை தாண்டாதீர்கள். 21 நாட்களுக்கு வேறெதைப் பற்றியும்  சிந்திக்காதீர்கள். இந்த ஊரடங்கு மக்களை  காப்பாற்றுவதற்கு தான் என மோடி கூறியிருந்தார். 

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய  அமைச்சர்கள்  பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்து இருக்கின்றனர்.