லடாக்கில் பசுமை எரிசக்தி பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பிரதமர் மோடி பெருமிதம்!
லடாக்கில் பசுமை ஆற்றல் வழித்தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது முக்கியமான ஒன்று என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை ஆற்றல் வழித்தடத்தின் (ஜிஇசி) இரண்டாம் கட்டம், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐஎஸ்டிஎஸ்) ஆகிய திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2029-30 நிதியாண்டில் நிறுவப்படும் இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 20,773.70 கோடி. திட்டத்திற்கு 40 சதவீதம் அதாவது ரூ.8,309.48 கோடி மத்திய நிதி உதவியாக (சிஎஃப்ஏ) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லடாக்கில் பசுமை ஆற்றல் வழித்தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது முக்கியமான ஒன்று என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “லடாக்கில் ஒரு பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான, பசுமை ஆற்றல் வழித்தடத்தின் (ஜிஇசி) இரண்டாம் கட்டத்திற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு முக்கியமான ஒன்றாகும். இந்த அற்புதமான திட்டம், நிலையான எரிசக்தி மற்றும் நமது கரியமில தடத்தை குறைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இது நமது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.
சிக்கலான நிலப்பரப்பு, பாதகமான தட்பவெப்ப நிலைகள் மற்றும் லடாக் பிராந்தியத்தின் எல்லை பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, செயல்படுத்தும் இத்திட்டத்தின் முகவராக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பவர் கிரிட்) இருக்கும். அதிநவீன மின்னழுத்த மாற்றி (VSC) அடிப்படையிலான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HVDC) அமைப்பு மற்றும் கூடுதல் உயர் மின்னழுத்த மாற்று மின்னோட்ட (EHVAC) அமைப்பு நிறுவப்படும்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் வழியாக ஹரியானாவில் உள்ள கைதால் வரையிலான மின் கடத்தல் பாதை தேசிய கிரிட்டுடன் இணைக்கப்படும். லடாக்கிற்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தில் இருந்து லே-இல் இருக்கும் லடாக் கிரிட்டோடு ஒன்றோடொன்று இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கரி முறைகேடு: அதானியை பாதுகாக்கும் பிரதமர் மோடி - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
ஜம்மு-காஷ்மீருக்கு மின்சாரம் வழங்குவதற்காக லே-அலுஸ்டெங்-ஸ்ரீநகர் வழித்தடத்துடன் இணைக்கப்படும். இந்த திட்டத்தில் 713 கிமீ டிரான்ஸ்மிஷன் லைன்கள் (480 கிமீ HVDC லைன்ஸ் உட்பட) மற்றும் 5 ஜிகாவாட் திறன் கொண்ட உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட முனையங்கள் பாங் (லடாக்) மற்றும் கைத்தால் (ஹரியானா) ஆகிய இடங்களில் நிறுவப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சக்தி திறனை அடைய இந்த திட்டம் பங்களிக்கும். இது நாட்டின் நீண்ட கால எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். இது மின்சாரம் மற்றும் இதர தொடர்புடைய துறைகளில் குறிப்பாக லடாக் பகுதியில் பல நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த திட்டம், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் இன்ட்ரா-ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கிரீன் எனர்ஜி காரிடார் ஃபேஸ்-II (INSTS GEC-II) க்கு கூடுதலாக உள்ளது. 2026 ஆம் ஆண்டிற்குள் 20 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
INSTS GEC-II திட்டம் 10753 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் மற்றும் 27546 மெகா வோல்ட் ஆம்ப்ஸ் (MVA) துணை மின்நிலையங்களின் திறனை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.12,031.33 கோடி மற்றும் CFA 33 சதவீதம் அதாவது மொத்தம் ரூ.34970 வழங்கப்படும். இத்திட்டத்திற்கு CFA கீழ் கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த 2020ஆம் ஆண்டில், தனது சுதந்திர தின உரையின் போது, லடாக்கில் 7.5 ஜிகாவாட் சோலார் பார்க் அமைப்பதாக அறிவித்தார். அதன்படி, விரிவான கள ஆய்வுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) லடாக்கின் கே பாங்கில் 12 GW பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் (BESS) 13 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) உற்பத்தித் திறனை அமைப்பதற்கான திட்டத்தைத் தயாரித்துள்ளது. இந்த பெரிய அளவிலான மின்சாரத்தைப் பிரித்தெடுக்க, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற உள்கட்டமைப்பு அவசியம்.