Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டம் என்ன ஆகும்?
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.8 லட்சம் கோடி தேவைப்படும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.8 லட்சம் கோடி தேவைப்படும்.
நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி பெயரால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்று வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்ட வயது வந்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையில், குடும்ப வருவாய் மற்றும் வறுமை ஒழிப்பில் இத்திட்டத்தின் தாக்கம் சிறப்பாகக் காணப்படுகிறது என்றும் ஊரக வளர்ச்சியை உள்ளடக்கிய தேசிய வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் சக்திவாய்ந்த கருவியாக உள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட அளவுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. சுமார் 50 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. 2015-16 நிதியாண்டில் இருந்து 2019-20 நிதியாண்டு வரையான காலத்தில் சராசரியாக 48 நாள் வேலை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
வேலை நாட்கள் கூடும்போது நிதி ஒதுக்கீட்டையும் கூட்டவேண்டிய அவசியம் ஏற்படும். உதாரணமாக, இப்போது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திருப்பவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, அவர்களுக்கு 60 நாள் வேலை கொடுக்கவேண்டும் என்றால் ரூ.1.1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதுவே 80 நாட்கள் என்றால் ரூ.1.5 லட்சம் கோடி தேவைப்படும்.
கடந்த 2020-21ஆம் நிதி ஆண்டில் ரூ.1.1 லட்சம் கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதுவே அதிகபட்சமாக ஒதுக்கீடு ஆகவும் உள்ளது. ஆனால் அடுத்த நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.98 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. 2022-23 நிதி ஆண்டில் மேலும் குறைக்கப்பட்டு ரூ.89,400 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவும் முதலில் ரூ.73 ஆயிரம் கோடி மட்டும் அறிவிக்கப்பட்டு, பின்னர் ரூ.16,400 கோடி கூடுதல் நிதியாக வழங்கப்பட்டது.
சூழ்நிலை இப்படி இருக்க 100 நாள் வேலைக்கு ரூ.1.8 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி ஊதியமாக ரூ.217.7 கொடுக்கப்பட்டிருக்கிறது. வருடாந்திர ஊதிய உயர்வு சராசரியாக 5.1 சதவீதம். அப்படியானால் வரும் நிதி ஆண்டில் ஊதியம் ரூ.229 வரைதான் உயரும். எனவே ஊதியத்திற்காக மட்டும் ரூ.1.3 லட்சம் கோடி வேண்டியிருக்கும். இதுதவிர வேலைக்கான கருவிகள் வாங்குவது மற்றும் நிர்வாகச் செலவினங்களையும் சேர்த்து ரூ.1.8 லட்சம் கோடி செலவாகலாம்.
குறைந்தபட்சம் கடந்த ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் 48 நாள் வேலையை உறுதி செய்ய ரூ.87,500 கோடி தேவைப்படும். இத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான ஊதிய நிலுவைத் தொகையாக ரூ.3,358 கோடியையும் சேர்த்து ஒதுக்கவேண்டும். இதே அளவு ஊதிய நிலுவை வரும் நிதி ஆண்டிலும் ஏற்படுவதாகக் கொண்டாலும், 2023-24 பட்ஜெட்டில் முந்தைய ஆண்டைவிட கூடுதல் நிதி ஒதுக்குவது அவசியம்.
பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதுதான் அவர் தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இருக்கும்.
Union Budget 2023-24: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்