இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.15,166 கோடி, உரிமை கோராமல் கிடப்பதாக, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு என்பது சாதாரண மக்களிடம் மட்டுமின்றி, மிகவும் படித்தவர்கள், பணக்காரர்களிடமும் மிகக் குறைவாக இருக்கிறது. காப்பீடு செய்யாத நிலையில் ஓர் இழப்பு ஏற்பட்டால், தவித்துப் போகின்றனர். அது உயிராக இருந்தாலும், தீ, சாலை விபத்தால் ஏற்படும் பொருட்சேதமாக இருந்தாலும், நமது மக்கள் நொடிந்து போகின்றனர்.


 இந்த நிலையில், காப்பீடு செய்தும், பெருந்தொகை கேட்பாரற்று இருப்பதாக காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சிஅமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.ஆர்.டி.ஏ.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடாக செலுத்திய ரூ.15,167கோடியை யாரும் உரிமை கோர இதுவரையில் வரவில்லை.

இந்தப் பணத்துக்கு உரியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக பணத்தை விநியோகம் செய்யுமாறு கூறியுள்ளோம்.பாலிசிதாரர்களின் பணத்துக்கு எல்லா காப்பீடு நிறுவனங்களும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். உரிய நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு அவர்களுக்குரிய தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரையிலான கணக்குப்படி யாரும் உரிமம் கோராத ரூ.15,167 காப்பீட்டுத் தொகையில் ரூ.10,509கோடி லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் உள்ளது. எஞ்சியுள்ள ரூ.4,657.45 கோடி தனியார் காப்பீட்டுநிறுவனங்களிடம் உள்ளது. அதில் 807.4 கோடி ஐசிஐசிஐ நிறுவனத்திடமும், ரூ.696.12 கோடி ரிலையன்ஸ் நிப்பான்நிறுவனத்திடமும், ரூ.678.59 கோடி எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடமும், ரூ.659.3 கோடி ஹெச்டிஎஃப்சி ஸ்டேண்டர்டு லைஃப் இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடமும் உள்ளது. பாலிசி செலுத்தும் காலம் முடிந்து, முதிர்வு காலமும் முடிந்துவிட்டது என்றால், அதை உடனடியாக பாலிசிதாரர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.