பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்கி போகாமல் பல வருடங்களாக பூமியில் கிடப்பதால் மழை நீர் பூமிக்கு செல்வது தடைபடுகிறது. மேலும் விலங்கு மற்றும் பறவை இனங்களுக்கும்  இதனால் அதிக பாதிப்பு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை அவை உண்பதால் அதில் வயிற்றில் சிக்கி பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஒருமுறை பயன்பாடு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற காந்தி ஜெயந்தி முதல் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றுசூழல் துறை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து பல்கலைகழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கேன்டீன், விற்பனை அங்காடிகள், ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டுவரவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஆசியர்களும் மாணவர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக துணிப் பைகள், காகிதப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.