பாசிஸ்டுகள் தூக்கி எறியப்படுவர்: ஹேமந்த் சோரன் கைதுக்கு உதயநிதி கண்டனம்!

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்  சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

Udhayanidhi stalin condemns hemant soren arrest smp

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்முறையாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அதன் பிறகு ஹேமந்த் சோரனிடம் விசாரிக்க மீண்டும் ஒரு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஜனவரி 29ஆம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி சென்ற அவர் ரகசியமாக மீண்டும் ராஞ்சி திரும்பினார். மேலும், ஜனவரி 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத்துறையிடம் தெரிவிக்கப்பட்டதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தெரிவித்தது.

முன்னதாக, டெல்லி சென்ற ஹேமந்த் சோரனிடம் விசாரணை மேற்கொள்ள அவரது டெல்லி இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லாததால் அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், ஹேமந்த் சோரன் ரகசியமாக ராஞ்சி திரும்பி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணையை தொடங்கினர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்  சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை.. புலனாய்வு அமைப்பு மூலம் பழங்குடியின தலைவரை துன்புறுத்துவதா?ஸ்டாலின்

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பதற்றம் அடைந்துள்ள பாசிஸ்டுகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து கொடூரமான வழிகளையும் பயன்படுத்துகின்றனர். பாசிஸ்டுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நமது தேசத்தின் குடிமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் பாசிஸ்டுகளை மக்கள் உறுதியாக தூக்கி எறிவார்கள்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஜார்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், அமைச்சருமான சம்பய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios