உத்தரப்பிரதேசத்தில் சன்பதாரா மாவட்டத்தில் நேற்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. அதேபோல டெல்லியில் இருந்து ராஞ்சி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலும் தடம் புரண்டது. இந்த இரு ரெயிலிலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

7 பெட்டிகள்

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அணில் சக்‌ஷேனா நிருபர்களிடம் கூறியதாவது-

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஜபல்பூருக்கு, சக்திகுஞ்ச் எக்ஸ்பிரஸ் நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் சோன்பத்ரா நகருக்கு அருகே 40 கி.மீ. தொலைவில் வந்தபோது, காலை 6.25 மணிக்கு தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இதில் ரெயிலின் 7 பெட்டிகள் பாதையைவிட்டு கீழை இறங்கின. ரெயில் 40 கி.மீ வேகத்தில் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் மாற்று ரெயிலில் அனுப்பி வைத்தனர். ரெயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன’’ என்றார்

ஒரு மாதத்தில் 3-வது விபத்து

உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் நடக்கும் 3-வது ரெயில் தடம்புரளும் விபத்து என்பது குறிப்பிடத்தக்து. இதற்கு முன், கடந்த மாதம் 19-ந்தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 22 பேர் பலியானார்கள், 156 பேர் காயமடைந்தனர். அதன்பின் 23-ந்தேதி கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு 100 பயணிகள் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்தானி ரெயில்

டெல்லியில் உள்ள மின்டோ பிரிட்ஜ் அருகே ராஜ்தானி அதிவிரைவு ரெயில் நேற்று காலை 11.45 மணி அளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்த வடக்கு ரெயில்வே செய்தித்தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறுகையில், “ உத்தரப்பிரதேசத்தில் காலையில் நடந்த சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்திலும் டெல்லியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்திலும் பயணிகள் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. ராஜ்தானி  ரெயில் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படாமல் தப்பித்தது. ’’ என்றார்.

ஒரே நாளில் இரு இடங்களில் இரு ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.