Asianet News TamilAsianet News Tamil

அமர்நாத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை..!

Two of the terrorists who were brainwashed in the Amarnath attack were shot dead
Two of the terrorists who were brainwashed in the Amarnath attack were shot dead
Author
First Published Sep 14, 2017, 9:04 PM IST


அமர்நாத் சென்று திரும்பிய பக்தர்கள் மீது கடந்த ஜூலை மாதம்  நடத்திய தாக்குதலுக்கு மூளையாகவும், திட்டமிட்டுக் கொடுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி உள்பட இருவரை என்கவுண்ட்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

நகரின் புறநகர் பகுதியான நவுகாம் அலிபார்க் பகுதியில் நடந்த என்க்கவுண்ட்டரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

பக்தர்கள் மீது தாக்குதல்

கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி அமர்நாத் சென்றுவிட்டு பஸ்ஸில் திரும்பிய பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 6 பெண்கள் உள்ளிட்ட 8 பக்தர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சில தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

ரகசிய தகவல்

இந்நிலையில், நகர் அருகே அலிபாக் பகுதியில் உள்ள நவுகாம் எனும் இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அந்த பகுதியை நேற்று நண்பகலுக்கு பின் பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கி சண்டை

பாதுகாப்பு படையினரைப் பார்த்ததும் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர், அதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி தரப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

என்கவுண்ட்டர்

இது குறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் ஐ.ஜி. முனிர் கான், ஜெனரல் கமாண்டிங் அதிகாரி பி.எஸ்.ராஜூ ஆகியோர் கூட்டாக ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

நகரின் நவுகாம் பகுதியில் இரு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புபடையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முக்கிய தளபதி

அதில் ஒருவர், அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த, மூளையாகச் செயல்பட்ட  அபு இஸ்மாயில் என்பதும், மற்றொருவர் சோட்டாகாசிம் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டன. இதில் காஷ்மீர் பகுதியின் லஷ்கர் இ தொய்பாதளபதியாக இஸ்மாயில் எனத் தெரியவந்தது. சோட்டா காசிம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக தானியங்கி துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

பாராட்டு

இதில் அபு இஸ்மாயில் என்ற தீவிரவாதி நீண்ட காலமாக பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார். இவர் மீது 15-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது  இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த செயலைச் செய்த பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம். இந்தஎன்கவுண்ட்டர் ஆப்ரேஷன் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்தது.

தீவிரவாதிகள் கொல்லப்பட்டதையடுத்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios