மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் என 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர்.  பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலை பொறுத்த வரையில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம். ஆகையால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி இரு வேட்பாளர்களை இறக்கியுள்ள நிலையில் ஒரு வேட்பாளர் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில் குஜராத் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களான அக்சய் படேல், ஜிது சவுத்ரி இருவரும் நேற்று சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இன்று சபாநாயகர் திரிவேதி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 66 ஆகக் குறைந்துள்ளது.