பிரதமர் மோடி வரலாற்று பிழையை திருத்துகிறார்; செங்கோல் குறித்து டுவிட்டரில் பெருகும் ஆதரவு!!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, விசிக உள்பட 19 கட்சிகள் தெரிவித்துள்ளன. ஓடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவும் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறது.
எதிர்க்கட்சிகளுக்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு அடிக்கல் நாட்டியபோது, ஆளுநரை அழைக்கவில்லை. அதற்கு பதிலாக சோனியா காந்திதான் அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும் என்று கூறினால், ஏன் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் மரபு மீறப்பட்டது என்ற கேள்வியை பாஜக எழுப்பியுள்ளது. தெலுங்கானாவிலும் சட்டப்பேரவை திறக்கப்படும்போது, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செங்கோல் குறித்தும் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒருவர் தனது பதிவில், ''செங்கோலை வாக்கிங் ஸ்டிக் என்று விமர்சித்துள்ளனர். செங்கோல் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆதினம் அவமதிக்கப்பட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
''ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக் என்ற பெயரில் செங்கோல் வைக்கப்பட்டு இருந்தது. 75 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த செங்கோல் புனித நீரால் புனிதப்படுத்தப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டு புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படுகிறது'' என்று பதிவிட்டுள்ளார் மற்றொருவர்.
மற்றொரு பதிவில், ''நேரு, அவருக்கு பின்னர் வந்தவர்களால் உருவாக்கப்பட்ட கமிட்டியால் உருவாக்கப்பட்ட முடிவுகள் வெட்கக்கேடானது. அண்டத்தில் சமநிலையை உருவாக்க அல்லது ரிதம் அல்லது தர்மத்தை பராமரிப்பதற்கான செங்கோல் பழங்காலத்திலிருந்தே வெறும் "வாக்கிங் ஸ்டிக்" ஆக மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
''அவர்கள் நமது சனாதனத்தை சாத்தான் போல நடத்தும்போது, செங்கோலை ‘தங்க வாக்கிங் ஸ்டிக்’ என்று முத்திரை குத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
''வரலாற்றாசிரியர்கள் நமது உண்மையான வரலாற்றுடன் விளையாடி உள்ளனர் என்பதற்கு இதுதான் சரியான உதாரணம். பிரதமர் மோடி அதை திருத்தி எழுதவில்லை, பிழையை திருத்துகிறார்'' என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.