trump daughter Tribute to modi

சிறு வயதில் தேநீர் விற்பனை செய்தீர்கள், வளர்ந்து வரும் போது அரசியலில் களமிறங்கி சாதித்து, தேசத்தின் பிரதமராக உயர்ந்துள்ளீர்கள். மாற்றம் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள் என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா டிரம்ப் புகழாரம் சூட்டினார். 

150 நாடுகள்

ஐதராபாதில் உலக தொழில்முனைவோர் மாநாடு நேற்று தொடங்கியது, இது நாளை மறுநாள் வரை நடக்கிறது. 150 நாடுகளில் இருந்து, 1500 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்துகின்றன.

இதில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து அதிபர் டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.

பாதுகாப்பு தீவிரம்

 இந்த தொழில்முனைவோர் மாநாடு, 35 ஏக்கர் பரப்பரளவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்திலும், ஐதராபாத் சர்வதேச வர்த்தக மையத்திலும் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி வெடிகுண்டு செயல் இழப்புபடையினர், மோப்ப நாய்கள், தீவிரவாத தடுப்புபடையினர் ஐதராபாத் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவாங்கா டிரம்ப் வருகை

ஐதராபாத் விமானநிலையத்துக்கு நேற்று அதிகாலை தனி விமானம் மூலம் இவாங்கா டிரம்ப், தலைமையில் ஒரு குழுவினர் வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் மலர் கொடுத்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து தான் தங்கும் பலாக்னுமா பேலஸ் ஓட்டல் வரை இவாங்கா டிரம்ப் குண்டு துளைக்காத காரில் பயணம் செய்தார்.

சந்திப்பு

ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை நேற்று தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, அந்த நிகழ்ச்சியை முடித்தபின், இவாங்காடிரம்பை சந்தித்து பேசினார்.

அதன்பின் ஐதராபாத் நகரில் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் உலக தொழில்முனைவோர் மாநாடு தொடங்கியது. இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 150 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 1000க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் “முதலில் பெண்; அனைவருக்கும் வளர்ச்சி’’ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது-

மாற்றம் சாத்தியம்

பிரதமர் மோடி தன்னுடைய சிறுவயதில் தேநீர் விற்று, அதன்பின் அரசியலுக்கு வந்து,தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராக உயர்ந்துள்ளார். மாற்றம் சாத்தியம் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்.

உங்களின் சொந்த முயற்சியால், கடின உழைப்பால்13 கோடிக்கும் மேலான மக்களை வறுமையில் இருந்து முன்னேற்றியுள்ளீர்கள். இது மிகச்சிறந்த முன்னேற்றம். பிரதமர் மோடியின் தலைமையில் தொடர்ந்து இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும். 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 50 கோடி நடுத்தர குடும்பத்து மக்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவுவீர்கள்.

முன்னேறும்

அடுத்த 3ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்(ரூ.9.66லட்சம் கோடி) மதிப்புடைய பொருளாதாரமாக உயரும். அதற்கு தொழிலாளர்கள் துறையில் பெண்களுக்கு சரிசமமான அளவு வாய்ப்பளித்து, இடைவெளியை குறைக்க வேண்டும்.

இந்தியாவின் நட்புறவை நினைத்து அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த பெருமைப்படுகிறார், உண்மையான நட்பு நாடு இந்தியா என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது நாட்டு தலைவர்களுடனான நட்புறவை வலிமைப்படுத்தும் பேச்சு மட்டுமல்ல, இரு நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு கூட்டுறவு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

சாத்தியமில்லை

பெண்களுக்கு அதிகாரமளிக்காமல், மனிதசமுதாயம் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை பிரதமர் மோடி நம்புகிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் போது, குடும்பம் முன்ேனறும், பொருளாதாரம், சமூகம் ஆகியவை முழு வளர்ச்சி அடையும்.

பெண்கள் தலைமையிலான வர்த்தகத்துக்கு ஊக்கம் அளிக்கும்போது, அது சமூகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்துக்கே சிறப்பானதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.