trouble in gst tax announcement

சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) திட்டமிட்டபடி ஜூலை 1-ந்தேதி நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால், இன்னும் சில மாதங்களுக்கு பின்பே நடைமுறைக்கு வரலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது “இ-வே” பில் எனப்படும் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புடைய பொருட்கள் ஆன்-லைனில் பதிவு செய்யவது தொடர்பான மென்பொருளை வடிவமைப்பதில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருவதில் சில மாதங்கள் தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.

“இ-வே” வரைவு மசோதாவுக்கான விதிமுறைகளை நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி.கவுன்சில் கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்தது. இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான எந்த பொருட்களும் மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்துக்கு கொண்டு சென்றாலோ அல்லது உள் மாநிலத்துக்குள்ளேயே கொண்டு சென்றாலோ அது குறித்து ஜி.எஸ்.டி. இணையதளத்தில்(ஜி.எஸ்.டி.என்.) பதிவு செய்வது அவசியமாகும் எனக் குறிப்பிடப்பட்டது.

இதன்படி, “இ-வே” பில்லின் காலம் 15 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு லாரி 100 கி.மீ. கடக்கமுடியும் என்பதை வைத்து 15 நாட்களுக்குள் 1000 கி.மீ.வரை கடக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் பில்லை ஆய்வு செய்யலாம்.

இதற்கிடையே ரூ.50 ஆயிரம் மதிப்பு என்பது மிகக்குறைவானது, அதிலும் கொடுத்துள்ள காலக்கெடு 15 நாட்கள் என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, ஆதலால் “இ-வே” பில்லுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் இருக்க வேண்டும். அனைத்துவிதமான பொருட்களையும் தங்கு தடையின்றி கொண்டு செல்ல வேண்டும் என தொழிற்துறையினர் சார்பில் கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது.

மேலும், கடந்த 3-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்தவுடன், அதன் இணையதளம் அடுத்த 3 மாதத்துக்கு கடும் பரபரப்பாகிவிடும். அப்போது, இ-வே பில்லுக்கு தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இணைப்பது என்பது சிறிது கடினம் இதற்கு 6 மாதம் ஆகும் என்று விவாதிக்கப்பட்டது. இதனால், “இ-வே” பில் முறையை சில மாதங்கள் தள்ளிப்போடலாம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், மேற்குவங்காளம், கேரளா, பீகார், ஒடிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கே உரிய “இ-வே” பில் முறையை உருவாக்கிவிட்டதால், இதை திடீரென தள்ளிப்போடுவது அந்த மாநிலங்களுக்கு கனிசமான வருவாய் இழப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இ-வே பில் குறித்த மென்பொருளை உருவாக்க ஏற்கனவே ஒப்பந்தப் புள்ளிகள் கொடுக்கப்பட்டுவிட்டதால், அதற்குரிய தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய 2 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. அந்த நிறுவனம் மென்பொருளை தயாரிக்க 3 மாதம் ஆகும், அதன்பின்பே நடைமுறைக்கு கொண்டு வர இயலும்.

இதனால், தேசிய தகவல் மையம் மூலம், இ-வே பில் மென்பொருளை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த இ-வே பில் மென்பொருள் உருவாக்கம் காரணமாக, ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருவதில், இன்னும் சில மாதங்கள் தாமதமாகும் எனத் தெரிகிறது.