திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரதமர் மோடி மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க முயற்சிப்பதுடன், பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர் என குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் பேசுகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் மம்தாவை விட்டு விலகுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டீர்கள். அதேபோல், மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும் என்று பேசினார். 

மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு முதலமைச்சராக இருக்க முடியாது என்று மம்தாவை கடுமையாக மோடி சாடினார். மம்தாவால் கனவில் கூட பிரதமர் ஆக முடியாது என்று கூறிய மோடி, குறைந்த அளவிலான சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லிக்கு அவரால் வர முடியாது என்றும் தெரிவித்தார். தன்னை மட்டும் அவதூறாக பேசி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் குறை கூறி பேசி வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.