திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவின் பேரில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குற்றம் சாட்டியவர்கள் என அனைவரும் ஆஜராக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இக்குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகிய மஹுவா மொய்த்ரா, கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி விசாரணையில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில், பாஜக எம்பி வினோத் குமார் சோங்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தங்களது விசாரணை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி கூடியது. அன்றைய தினமே மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஐந்தாவது நாளான இன்று கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் மக்களவையில் மஹுவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவரின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறையற்ற நடத்தைக்காக மக்களவை எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்யவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு விசாரணை அறிக்கையின் பரிந்துரை மக்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், பாஜகவுக்கு உள்ள பெரும்பான்மை காரணமாக அந்த வாக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவேறியது.

சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் மரணம்: தற்கொலையா? சித்தரவதையா?

அதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். “பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நடத்தை நெறிமுறையற்றது. எம்பி என்ற முறையில் அவரது நடத்தை நெறிமுறையற்றது என்ற குழுவின் முடிவுகளை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. எனவே அவர் எம்.பி.யாக நீடிப்பது ஏற்புடையதல்ல.” என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். தொடர்ந்து, வருகிற 11ஆம் தேதி வரை மக்களவை தள்ளிவைக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பின்பற்றும் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், அந்த அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.