மேற்கு வங்காளத்தில் ஐந்து கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற பாஜகவும் முட்டி மோதுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியும் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிவருகிறார்கள்.
இந்நிலையில் வாக்காளர்கள் தங்களுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் புதிய உத்தியைப் பின்பற்றுவது தற்போது தெரிய வந்திருக்கிறது. மின்னணு வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பட்டனில் வாசனை திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்ததாக அந்த மாநில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை முகர்ந்து பார்த்து, வாசனை வருகிறதா என அக்கட்சித் தொண்டர்கள் சோதனை செய்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதி செய்வதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. தற்போது இந்த உத்தி மேற்கு வங்காளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக மூத்த தலைவர் ஷிஷிர் பஜோரா, “மக்களால் தோற்கடிக்கப்பட்டுவிடுவோம் என முன்கூட்டியே  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்திருக்கிறது. அதைத் தடுக்க எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தக் கட்சியின் இந்தச் செயலே ஓர் உதாரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நம்மூர் அரசியல்வாதிகளையே விஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே..!