மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கேதி கிராமத்தில் வசித்து வந்தவர் பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். அந்தப் பெண்ணுக்கு அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின இளைஞர் ஒருவருடன் கள்ளகாதல் ஏற்பட்டது. இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் அந்தப் பெண்ணை சந்தேகத்துடன் கண்காணிக்க தொடங்கினர். 

இந்நிலையில், அந்த இளைஞரும் அப் பெண்ணும் சென்ற மாதம் வீட்டை விட்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டனர். இதை அடுத்து, அந்தக் கணவரின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களை கிராமத்துக்கு அழைத்து வந்தனர். பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் அந்தப் பெண்ணுக்கு ஒரு விநோத தண்டனையை வழங்கினர். அதன்படி, அந்தப் பெண் தன் கணவரை 2 கி.மீ. தொலைவுக்கு முதுகில் சுமந்து கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. வேறு வழியின்றி அந்தப் பெண்ணும் அவ்வாறே தன் கணவனை தோளில் சுமந்து கொண்டு சென்றார்.

பின்னர் அந்தப் பெண்ணை அவள் கணவனும் கிராமத்தவர் சிலரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்தப் பெண், போலீஸாரிடம் சென்று தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்தும், தன்னை தாக்கியவர்கள் குறித்தும் புகார் அளித்தார். அதை அடுத்து, அப்பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர், தந்தை, கிராமத்தினர் என ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.