111 கி.மீ சுரங்கப்பாதை; ஈபிள் டவரை விட உயரமான பாலம்; அழகான ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் பாதை ரெடி!

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) பாதையில் ரயில் சோதனை ஓட்டம் முழுமையாக முடிந்துள்ளது. இந்திய ரயில்வேயின் 20 ஆண்டு கால கனவான இந்த அழகான ரயில் பாதையில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Trial run on Jammu-Srinagar railway line has been completed ray

இந்திய ரயில்வேயின் 20 ஆண்டு கனவு திட்டம் 

இந்தியாவின் மிக அழகிய மாநிலமாக விளங்கி வரும் ஜம்மு-காஷ்மீரில் மலைகள், பள்ளத்தாக்குகள் ஏராளம் உள்ளன. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்து இல்லாததால் ஜம்மு – உத்தம்பூர் – கட்ரா – ஸ்ரீநகர் – காசிகுண்டு – பாராமுல்லா இடையே 250 கிமீக்கும் அதிகமான தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் 20 ஆண்டு கால கனவான இந்த திட்டம் கடும் பனிப்பொழிவு, பனிப்புயல், கனமழை உள்ளிட்ட பல்வேறு சவாலான காலநிலைகளை சமாளித்து இப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. 

அதாவது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் பாதையில் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று கத்ரா-புட்காம் ரயில் பாதை இடையே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக‌ நடந்து முடிந்துள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு பாதையின் கடைசி ரயில் சோதனை ஓட்டம் இதுதான் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

உலகின் மிக உயரமான ரயில் பாலம்

மொத்தம் ரூ.41,000 கோடி செலவில் USBRL ரயில் பாதை இணைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையின் மொத்த நீளம் 272 கி.மீ ஆகும். இந்த 272 கிமீ தூரத்தில் சுமார் 111 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாக உள்ளது. இதில் ஒரு சுரங்கப்பாதை மட்டும் 12.77 கி.மீ தூரத்துக்கு மிக நீளமாக அமைந்துள்ளது. இந்த பாதையில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

அதாவது ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் மீது உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 1315 மீட்டர் ஆகும். ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஈபிள் டவரின் உயரத்தை விட அதிகமாகும். ஈபிள் டவரின் உயரம் 330 மீட்டர் ஆக இருக்கும் நிலையில், செனாப் நதியின் பாலம் அதை விட அதிக உயரமாக உள்ளது. மற்ற இடங்களில் விரைவாக ரயில் பாதை அமைக்கப்பட்ட போதிலும், இந்த பாலத்தை கட்டி முடிக்க மட்டும் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

பெரிய நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும்

மொத்த திட்டத்தில் இந்த பாலத்துக்கு மட்டுமே ரூ.1,486 கோடி செலவிடப்பட்டுள்ளது. செனாப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் 1,086 அடி உயர கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 77 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டதாகும். செனாப் பாலம் 40 கிலோ வெடிபொருட்களின் அதிர்வையும், ரிக்டர் அளவுகோளில் 8 புள்ளிகள் வரை நிலநடுக்கம் வந்தாலும் அதை தாங்கும் வகையிலும் மிக உறுதியுடன் கட்டப்பட்டுள்ளது.

Trial run on Jammu-Srinagar railway line has been completed ray

காஷ்மீர் பள்ளத்தாக்கை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் செனாப் பாலம் அமைந்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு, திடீர் வெள்ளம் என பல்வேறு சவால்களான சூழ்நிலைகளை சமாளித்து இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் வழித்தடத்தில் இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாலமும் அமைந்துள்ளது. 

ஸ்ரீநகர்-கன்னியாகுமரி நேரடி ரயில் 

இந்த பாலம் ரியாசி மாவட்டத்தை கத்ராவுடன் இணைக்கும் அஞ்சி ஆற்றின் மீது 331 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 725.5 மீட்டர் ஆகும். இதில், 472.25 மீட்டர் கேபிள்களில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த ரயில் பாதையில் ஏராளமான சிறு, குறு பாலங்களும், குகைகளும் உள்ளன. இந்த வழித்தடத்தில் மெயின் லைனில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும், 'டர்ன்அவுட்டில்' மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஆர்வம் 

இதன்மூலம் காஷ்மீரில் இருந்து இந்தியாவின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியையும், நாட்டின் மற்ற இடங்களையும் நேரடியாக ரயில் மூலம் இணைக்க வழி பிறந்துள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரையிலான நேரடி ரயில் சேவையை பிரதமர் மோடி குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீநகர் முதல் நாட்டின் மற்ற இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையும், தொழில் துறையும் இனி ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடையும். இந்த பாதையில் ரயிலில் பயணிக்க நாடு முழுவதும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். மிகவும் அழகான, திரில்லிங்கான இந்த ரயில் பாதை இந்திய ரயில்வே வரலாற்றில் என்றென்றும் ஒரு மைல்கல்லாக நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios