ரெயில்வே துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு போதுமான நிதி இல்லாததையடுத்து, பயணிகள் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரெயில்வேதுறையின் ‘சிறப்பு பாதுகாப்பு நிதி’ திட்டத்தை நிதி அமைச்சகம் புறக்கணித்ததையடுத்து, பயணிகள் ரெயில் கட்டணம் உயர்கிறது.

மேம்பாட்டு நிதி

ரெயில்வே துறை அமைச்சகத்தின் திட்டப்படி, இருப்புப்பாதை தடங்களை வலிமைப்படுத்தவும், சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், ஆள் இல்லா இருப்பாதை பகுதியை குறைத்து பாதுகாப்பை பலப்படுத்தவும் நிதி தேவைப்பட்டது.

இதற்காக சிறப்பு ராஷ்ட்ரிய ரெயில் சன்ராக்‌ஷ கோஷ் என்ற திட்டத்தை நிதி அமைச்சகத்திடம் முன்வைத்து, ரூ. 1.19 லட்சம் கோடி கோரியது. ஆனால், இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, நிதி அமைச்சகத்தால் 25 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்க முடியும், மற்ற 75 சதவீதத்தை ரெயில்வே துறை சுயமாக நிதி திரட்டிக் கொள்ள கேட்டுக்கொண்டார்.

கட்டணம் உயர்வு?

இதனால் வேறுவழியின்றி ரெயில்வே துறை அமைச்சகம் , சிறப்பு பாதுகாப்பு நிதி என்ற பெயரில், பயணிகள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ ஏற்கனவே பயணிகள் முன்பதிவு குறைந்துவரும் நிலையில், ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சர் முன்வரவில்லை. ஏற்கனவே, ஏ.சி.முதல்வகுப்பு, 2-ம் வகுப்பு ஏ.சி. ஆகியவற்றின் கட்டணம் அதிகமாக இருக்கிறது.

இருந்தபோதிலும், நிதி திரட்டுவதற்கு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர அமைச்சருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதலால், சாதாரண படுக்கை வசதி, ஏ.சி. 2 டயர் மற்றும் 3டயர் படுக்கை வசதி, ஆகியவற்றின் கட்டணம் உயர்த்தப்படுகிறது, அதேபோல, முதல், 2-ம் வகுப்பு ஏ.சி. கட்டணம் சிறிதளவு உயர்த்தப்படுகிறது. கட்டணம் உயர்வு குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. அது தொடர்பான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன'' என்று தெரிவித்தார்.

எதற்கு நிதி?

ரெயில்வே துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ள ராஷ்ட்ரிய சங்ராக்‌ஷ கோஷ் திட்டம் மூலம் திரட்டப்படும் நிதி, ரெயில் சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அனைத்து ஆள்இல்லா இருப்புப் பாதைபகுதிகளையும் நீக்கி விபத்துக்களை தடுத்தல் நோக்கமாகும்.

பெரும்பாலான விபத்துக்குள் ஆள் இல்லா இருப்புப் பாதை பகுதிகளில்தான் நடக்கிறது என்பதால், இந்த திட்டத்தின்படி இருப்புப்பாதைகளுக்கு மேல் பாலமும், அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்த இருப்புப்பாதை பலமாக இருக்க வேண்டும். அதைப் பலப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.