செல்போன் எண்களுக்கு கட்டணம் வசூல்? ட்ராய் விளக்கம்!
மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து ட்ராய் விளக்கம் அளித்துள்ளது
இந்தியாவில் பலரும் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாமல் வெறும் இன்கம்மிங் அழைப்புகளுக்கு மட்டுமே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை களையும் பொருட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் இல்லையென்றால் செல்போன் எண் செயலிழந்து விடும் திட்டத்தை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன.
இதனிடையே, மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவோ அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் எனவும், இந்த கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து ட்ராய் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கு கட்டணம் விதிக்கபட உள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என ட்ராய் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கும் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போருக்கும் கட்டணம் விதிக்கபட உள்ளதாக சில ஊடகங்களில் (அச்சு, மின்னணு, சமூக ஊடகம்) செய்தி வெளியாகி இருப்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தவறானதாகும் என்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தவே இது பயன்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
குத்தகை தொகை செலுத்தாத திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல்: தமிழ்நாடு அரசு விளக்கம்!
ஏற்கனவே, “தேசிய எண்ணிடல் திட்டத்தில் சீர்திருத்தம்” (Revision of National Numbering Plan) தொடர்பான ஆலோசனை அறிக்கை 2024ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன் மீது சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகளை ஜூலை 4ஆம் தேதிக்குள்ளும் எதிர் கருத்துகளை 2024, ஜூலை 18ஆம் தேதிக்குள்ளும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் திறமையான நிர்வாகம் மற்றும் நியாயமான பயன்பாட்டுக்காக வகுக்கப்பட்டுள்ளது என்று ட்ராய் விளக்கம் அளித்துள்ளது.
துல்லியமான தகவலுக்கு இந்த ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு மற்றும் ஆலோசனை அறிக்கையை (https://trai.gov.in/notifications/press-release/trai-issues-consultation-paper-revision-national-numbering-plan) என்ற இணைய தளத்தில் பொதுமக்கள் கண்டு கொள்ளலாம். மேலும் விளக்கம் அல்லது தகவல் பெற ட்ராய் அமைப்பின் ஆலோசகர் அப்துல் கயூமை advbbpa@trai.gov.in என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளவும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.