உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 4421 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 114 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா,கேரளா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 891 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 621 ஐ எட்டியுள்ளது. 6 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கே பாதிப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 326 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.