டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவி வரும் கடும் புகைமூட்ட மூடுபனி காரணமாக நாளை ஆயிரத்து 800 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததாலும், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அறுவடைக்‍குப் பின்னர் வயல்களில் அரிதாள்களை எரித்ததால் ஏற்பட்ட புகை, காற்றின் வேகம் காரணமாக டெல்லியை சூழ்ந்ததாலும், புகைமூட்டத்துடன் கடும் மூடுபனி நிலவுகிறது. 

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு நிலவி வரும் மூடுபனி காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மாசு காரணமாக பொதுமக்களின் கண்களில் எரிச்சல் ஏற்படுவதுடன், சாலைகளில் செல்வோர் இருமிக் கொண்டே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

கடும் புகைமூட்ட மூடுபனி காரணமாக டெல்லியின் 3 முனிசிபல் மாநகராட்சிகளுக்‍குட்பட்ட ஆயிரத்து 800 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. 

இதனிடையே நிலைமையை சீராக்க உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டெல்லி ஆளுநர் திரு. Najeeb Jung, நாளை உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.