ஆந்திர மாநிலம் சித்தூரில் தக்காளி விவசாயியை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாததாக இருக்கும் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதுமே தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தக்காளி விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தக்காளி வியாபாரிகள் சிலர் ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரம் தக்காளி திருட்டு, தக்காளி விவசாயி கொலை, தக்காளியை பயன்படுத்தியதால் கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற மனைவி, தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு என பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் கோலாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை ஏற்றி சென்ற லாரி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்துக் கடவுள்களுக்கு எதிராக உரையாற்றிய பேராசிரியர்.. மாணவர்கள் அளித்த புகார் - என்ன செய்தது கல்லூரி நிர்வாகம்

இந்த நிலையில் தக்காளி விவசாயியை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்தைக்கு தக்காளியை எடுத்துச் சென்ற விவசாயியை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி 4.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் இங்குள்ள புங்கனூரு நக்கபண்டா பகுதியில் நடந்துள்ளது.

லோக ராஜ் என்ற விவசாயி, பாலமேனாறு சந்தைக்கு தக்காளியை எடுத்துச் சென்றபோது, அவரை பீர் பாட்டில்களால் சிலர் தாக்கியுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.4.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த விவசாயியை அப்பகுதியினர் புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து புங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்தியாவில் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால், அவை சந்தைகளில் மதிப்புமிக்க பொருளாக மாறியுள்ளது. தக்காளி தற்போது கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையாகி வருவதாகவும், வரும் நாட்களில் அதன் விலை கிலோ ரூ.300-ஐ தொட வாய்ப்புள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடங்கியது: எவ்வளவு காலம் நடக்கும்?