Telangana: பிரபல நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்தார்; தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டி?
பிரபல நடிகையும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார்.
தெலுங்கானா பாஜக பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான தருண் சுக் முன்னிலையில் டெல்லியில் பாஜக அலுவகத்தில் நடிகை ஜெயசுதா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவரும், மத்திய சுற்றுலா துறை அமைச்சருமான ஜி. கிஷான் ரெட்டி, கட்சியின் துணைத் தலைவர் டி.கே. அருணா கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசுதாவை கிஷான் ரெட்டி சந்தித்து பாஜகவில் இணையுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த ஓராண்டாகவே பாஜகவில் இணைவதற்கு ஜெயசுதா திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எடாலா ராஜேந்திராவும் ஜெயசுதாவை சந்தித்து பாஜகவில் இணையுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார். பாஜகவில் இணைய வேண்டுமானால் சில நிபந்தனைகளுக்கு பாஜக கட்டுப்பட வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே இணைவேன் என்று ஜெயசுதா கூறி இருந்ததாகவும், மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டின் இறுதியில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினருக்கு பாஜக அழைப்பு விடுத்து வருகிறது.
ஜெயசுதா சினிமா வாழ்க்கை:
ஜெயசுதா 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் அழைப்பின் பேரில் 2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டில் செகந்திராபாத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால், மீண்டும் 2014ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, 2016 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியின் இணைந்தார். ஆனால், பெரிய அளவில் அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் தனது மகன் நிஹார் கபூருடன் இணைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதே வருடம் தான் ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்றுக் கொண்டார். ஆந்திராவுடன் தனக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜெயசுதா தெளிவுபடுத்திஉள்ளார்.