நாட்டில் பணப்பற்றாக்குறை கடுமையாக இருக்கும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டோல்கேட்’களில் வாகனங்களின் போக்குவரத்தை சீராக்கும் வகையில் டிசம்பர் 2-ந் தேதி வரை கட்டணம் வசூலிப்பை ரத்து செய்து மத்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், டிசம்பர் 3-ந் தேதியில் இருந்து, 15வரை பழைய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து ‘டோல்கேட்’களிலும் செல்லும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. திடீரென வெளியிட்ட மத்திய அரசின் இந்த அறிவிப்பால், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ‘டோல்கேட்’களில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வாங்க மறுத்தனர். இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடந்தன. 

இதனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நாட்டில் போக்குவரத்து எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்காக டோல்கேட் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

முதல் நவம்பர் 11ம் தேதி வரையும், பின்னர் நவம்பர் 14ம் தேதி வரையும் ரத்து நீடிக்கப்பட்டது. பணப்புழக்கம் சுமூகமாகாத காரணத்தால் இந்த கட்டண ரத்து 18ம் தேதி வரையும், பின்னர் 24ம் தேதி (நேற்று) வரையும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டண ரத்தை டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்தும், 3-ந்தேதியில் இருந்து 15வரையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை அனுமதித்தும் மத்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்துவரும் நாட்களில் வாகனம் ஓட்டி வருபவர்கள் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில், ‘டோல்கேட்’களில் கூடுதல் ‘ஸ்வைப்பிங் மெஷின்’, ஸ்டேட் வங்கி உதவியுடன் பொருத்தப்படும். இதன் மூலம் வாகனங்கள் நீண்டநேரம் நிற்காமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும்.

இந்த கட்டண ரத்து தொடர்பாக அனைத்து ‘டோல்கேட்’களுக்கும் , கட்டண வசூலிப்பவர்களுக்கும் அரசு அறிவிப்பு செய்துவிட்டது'' என்று தெரிவித்தார்.