அவுரங்காபாத்தில் ஹார்பிக் நிறுவனத்தின் சார்பி்ல், தி ஹார்பிக் வேர்ல்ட் டாய்லட் காலேஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ரெக்கிட் பென்கிஸர் நிறுவனத்தால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் துப்புரவுப் பணியாளர்களின் பணியை இன்னும் மேம்படுத்தும் வகையில் நவீன கருவிகளைக் கையாளுதல், பணித்திறனை மேம்படுத்துதல், அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு அளித்தல், கழிவறை நோய்கள், கழிவறைப் பயன்பாடு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.

இந்த ஹார்பிக் டாய்லெட் கல்லூரியில் நாள்தோறும் 3 மணிநேரம் வகுப்புகள் நடைபெறும். 30 பேர் கொண்ட ஒவ்வொரு பிரிவுக்கும் வாரத்துக்கு 5 நாட்கள் வகுப்புகள் நடக்கும். பெண்களுக்கு நண்பகல் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஆண்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தனியார் நிறுவனத்தின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் கழிவறை பராமரிப்பு குறித்து அளிக்கப்படும் பயிற்சியில் 3,200 பேர் தேர்வாகியுள்ளார்கள்.


ரெக்கிட் பென்கிஸர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தக் கல்லூரி தொடங்கப்பட்ட ஒரு ஆண்டில் 3,200 பணியாளர்கள் பயிற்சி பெற உதவியுள்ளோம், இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு 100 சதவீதம் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார், அரசு நிறுவனங்களிலும் வேலை கிடைத்துள்ளது.." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது